தினம் ஒரு பாசுரம் - 79
தினம் ஒரு பாசுரம் - 79
முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானைக் கலை பரவும்
தனி யானையைத் தண்டமிழ் செய்த நீலன் தனக்கு உலகில்
இனியானை எங்கள் இராமானுசனை வந்து எய்தினரே.
--- ராமானுச நூற்றந்தாதி (திருவரங்கத்து அமுதனார்)
இன்று விஜயதசமி ஸ்பெஷலாக @Kalsekhar கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு பாசுர விளக்கம் எழுத முடிவெடுத்தேன். அமுதனாரின் ஓர் அமுதப் பாசுரத்தை அனுபவிப்போம். பெரும் செல்வந்தராக ”பெரியகோயில் நம்பி” என்ற இயற்பெயர் கொண்ட அமுதனாரை நல்வழிப்படுத்தி, தமது சீடராக ஆக்கிக் கொண்டு, அன்னாரை இராமானுஜ நூற்றந்தாதி என்ற அற்புதத்தை அருளச்செய்த கூரத்தாழ்வானை (இராமனுஜரின் பிரதம சீடர்களில் முக்கியமானவர்) நினைவு கூர்ந்து போற்றுவோம்!
அமுதனார் தன் ஆச்சார்யனையும் “மொழியைக் கடக்கும் பெரும்புகழான், வஞ்ச முக்குறும்பாம். குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்...” என்று பிறிதொரு ரா.நூ பாசுரத்தில் போற்றியிருப்பார்.
பொருளுரை:
முனியார் துயரங்கள் முந்திலும் - துன்பங்கள் மிகுந்தாலும் வெறுப்புணர்வு/வருத்தம் கொள்ளாதவர்,
இன்பங்கள் மொய்த்திடினும் - இன்பங்கள் (பல) சூழ்ந்து நின்றாலும்
கனியார் மனம் - (தமது) உள்ளக் களிப்பு கொள்ளாதவர்
கண்ணமங்கை நின்றானைக் - திருக்கண்ணமங்கை திவ்யதேசத்தில் நின்று ஆளும் பக்தவத்சலப் பெருமாளை
கலை பரவும் - சாத்திரங்கள், தோத்திரங்கள், ஆயகலைகள் என அனைத்தாலும் போற்றித் துதிக்கப்படுகிற,
தனி யானையைத் - ஒப்பிலாத, ஒரு வீறு கொண்ட யானையைப் போல விளங்குகிற அந்தப் பரந்தாமனை,
தண்டமிழ் செய்த நீலன் - (பெரியதிருமொழி உட்பட்ட ஆறு பிரபந்தங்கள் அருளி) குளிர்த்தமிழ்ப் பாசுரங்களால் போற்றிய திருமங்கை மன்னனை
தனக்கு உலகில் இனியானை - தனக்கு இந்தப் பூவுலகில் மிக்க உவப்பானவராக (உள்ளத்தில்) ஏற்ற
எங்கள் இராமானுசனை - எங்கள் (எம்பெருமானாரான) இராமனுச முனியை
வந்து எய்தினரே - வந்தடைந்து (திருவடி) பணிந்தனரே!
பாசுரக்குறிப்புகள்:
இராமனுஜரின் சிறப்பை, அவர் திருவடி பணிந்த அடியவரின் இயல்புகளை ஏற்றிச் சொல்லி, வெளிப்படுத்தும் நேர்த்தியான பாசுரம், இல்லையா? அமுதனார் குறிப்பிடும் அடியார்கள், இன்பம், துன்பம் என்ற இரண்டையும் சீராக நோக்கும் குணம் கொண்டவர்கள், உள்ளத்து உறுதி மிக்கவர்கள், பற்று அற்றவர்கள் (ஆக கற்றறிந்த சான்றோர் என்பது தெளிவு). அத்தகையவரே, ராமானுஜரைத் தேடிவந்து அவர் திருவடியில் சரண் புகுந்ததாக திருவரங்கத்து அமுதனார் அழகாக அருளுகிறார்!
மேற்கூறிய வகை அடியவரைக் குறிப்பிடும் பாசுரத்தில் திருமங்கையாழ்வாரைப் போற்றுவதில் ஒரு பொருத்தம் உள்ளது. கலியன், நீலன், பரகாலன், மங்கை மன்னன் என பல திருநாமங்கள் உடைய ஆழ்வாரும் தனது ஆரம்ப வாழ்வில் இன்ப வாழ்க்கை வாழ்ந்தவர். பின்னர், குமுதவல்லி நாச்சியார் மேல் மையல் கொண்டு, அவரை மணம் புரியவேண்டி, ஒரு வைணவராக ஆகி, தொண்டு செய்யவேண்டி, பல இன்னல்களைச் சந்தித்தவர். ஆக, திருமங்கை ஆழ்வார் இன்பங்களை எளிதாக விட்டொழித்ததோடு, துனபங்கள் குறித்தும் கவலை ஏதும் இன்றியே இருந்தவர் என்று புலப்படுகிறது அல்லவா!
பின்னர், திருவாலித் திருநகரியில் எழுந்தருளியிருக்கும் வயலாளி மணவாளப் பெருமாள், ஆழ்வாரை தடுத்தாட்கொண்டு, அவருக்கு திருமந்திர உபதேசம் பண்ணி, அவரை 6 திவ்வியப் பிரபந்தங்கள் அருளச் செய்தது (''மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர் கோன் ஆறு அங்கம் கூற அவதரித்த'' - உபதேச ரத்தினமாலை) நாம் அறிந்த ஒன்றே.
பெருமாளையும், ஆச்சார்யப் பெருமக்களையும் யானையுடன் ஒப்பிடுவது உண்டு. அவ்வகையில், திருக்கண்ணமங்கைப் பெருமாளை அமுதனார் ஒப்பில்லாதொரு கம்பீர ஆனையாகப் பார்க்கிறார்! நம்மாழ்வார் ஒரு திருவாய்மொழிப் பாசுரத்தில் ”தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து, என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே” என்று தண் திருவேங்கடம் வாழ் அண்ணலை யானையுடன் ஒப்பு நோக்குகிறார். பிறிதொரு பாசுரத்தில் “மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய, என்னானை என்னப்பன் என் நெஞ்சிலுல் உளானே” என்று நம்மாழ்வார் உருகுகிறார்!
கண்ணன் மீது கொண்ட பேரன்பில் நம் ஆழ்வார், யசோதைக்கு நிகரானவர். கோகுலக்கண்ணனை ஒரு குட்டி யானையாக பார்க்கிறார், “அசோதைக்கு அடுத்த பேரின்பக் குலவிளங் களிறே! அடியனேன் பெரிய அம்மானே! கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கைஉகிர் ஆண்ட வெங்கடலே”. அதோடு, பரமன் ஆனவன், ஒரு யானைக்கு (கஜேந்திரன்) அருள் செய்த யானையும் கூட :-)
திருமங்கை மன்னன் திருநெடுந்தாண்டகப் பாசுரத்தில்
“தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலதாயினாய்” என்று பெருமாளை நாற்திசை யானைகளாக உருவகித்து ஏற்றிப் பாடுகிறார். அதாவது, ”தென்திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை மலையில் (கள்ளழகர் கோயில்) வீரக் களிறாய், வடவேங்கடத்தில் (திருமலை) பெருமைமிகு களிறாய், மேற்கில் திருவரங்கத்தில் பள்ளி கொண்ட யானையாய், கிழக்கில் திருக்கண்ணபுரத்தில் வடிவுடை யானையாய்” என்று பக்திப் பேருவகையில் ஆழ்வார் அருளியதை ஓதுகையில் மெய்சிலிர்க்கும்! முழுப்பாசுரம் கீழே. சொல்லிப்பாருங்கள், உங்களுக்கே புரியும்!
பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்,
என் ஆனாய்? என் ஆனாய்? என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன், உலகம் ஏத்தும்
தென்னானாய் வடவானாய் குடபால் ஆனாய் குணபால் அது ஆயினாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திரு மூழிக்களத்தானாய் முதல் ஆனாயே!
தண்டமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் இனியானை எங்கள் இராமானுசனை - இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். அதாவது, திருமங்கையாழ்வாருக்கே மிக்க உவப்பளித்தவராக இராமனுஜர் திகழ்ந்தார் என்று மாற்றிப் பொருள் கொண்டாலும் தவறில்லை!
--- எ.அ.பாலா
0 மறுமொழிகள்:
Post a Comment